Wednesday 18 January 2012
லிப்ஸ்டிக் உருவான வரலாறு, லிப்ஸ்டிக் பிறந்த கதை; உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியவர்கள் இந்தியர்கள் தான், history of lipstick, indians are the first man to produce lipstick
அனைவருக்கும் வணக்கம், மேலை நாட்டு நாகரீகம் என்று நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கை கண்டுபிடித்தவர்களும், உலகிலேயே முதன் முதலில் தயாரித்து உபயோகித்தவர்களும் இந்தியர்கள் தான் என்று கூறினால் நம்புவீர்களா நண்பர்களே, ஆம் உண்மைதான், பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன் முதலில் லிப்ஸ்டிக்கை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவார். ஆச்சர்யமாக உள்ளதா வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
மெசபடோமியா, எகிப்து மற்றும் சீனா ஆகிய புகழ் பெற்ற நாகரீகங்களை போல சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக் கண்டத்தில் மிகவும் பிரசித்திபெற்று விளங்கிய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் (கி.மு.3300 – கி.மு.1300) ஆகும். சிந்து சமவெளி பிரதேசம் என்பது இன்றைய பாகிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளையும் இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியது. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்க சில ஒப்பனை பொருட்களை பயன்படுத்திஇருக்கிறார்கள், அவற்றில் ஒன்றுதான் இந்த லிப்ஸ்டிக்.
பஞ்சாபிய பெண்கள் லிப்ஸ்டிக் தயாரித்த விதம் அலாதியானது, இதற்காக அவர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தேன் மெழுகு மற்றொன்று தாவர நிறமிகள். தேன் மெழுகு என்பது தேன்கூட்டிலிருந்து தேனை நீக்கியபின் கிடைக்கும் மாவு போன்ற பொருளாகும் அதனுடன் சிலவகைத் தாவரங்களில் இருந்து எடுக்கப்பட்ட நிரமிப்பொருட்களை கலந்து திரவ (Liquid) வடிவில் கிடைத்த கூழ்மத்தை தங்களது உதடுகளில் வர்ணமாக பூசிக்கொண்டனர், இதுதான் இன்றைய நவீன லிப்ஸ்டிக் தயாரிப்பதற்கான முன்னோடி சிந்தனையாகும்.
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு வணிகர்களின் வாயிலாக உதட்டு சாயம் பற்றிய செய்திகள் மெசபடோமியப் பிரதேசத்தை எட்டியது. ஆரம்பத்தில் மெசபடோமிய மக்கள் (கி.மு.1500) விலையுயர்ந்த நகைகளைத்தான் பொடியாக்கி உதட்டில் சாயமாக பூசியிருக்கிறார்கள் நாளடைவில் சிலர் வண்ணத்து பூச்சிகளின் உடலிலுள்ள நிறத்தையும் இன்னும் சிலர் மயிலின் இறகிலுள்ள நிறத்தையும் கொண்டு தங்களது உதட்டை அலங்கரித்துக் கொண்டார்கள் என்று சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய பொற்காலத்தில் (கி.பி. 936 – கி.பி. 1258) அபு அல் காசிம் (கி.பி.936 – கி.பி.1013) என்ற முஸ்லிம் மேதை, தேன்மெழுகு, மெழுகு, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வர்ணபசைகள் கொண்டு முதன்முதலாக தின்ம வடிவிலான (Solid-Lipstick) லிப்ஸ்டிக்கை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதாவது இன்று புழக்கத்தில் இருக்கும் லிப்ஸ்டிக். இதற்க்கு முன்பு லிப்ஸ்டிக் திரவ வடிவில் தான் தயாரிக்கப்பட்டது.
கி.பி. பதினாறாம் நூற்றாண்டு வரை பொதுமக்களிடையே லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதில் மிகப்பெரும் தயக்கம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். காரணம் ஆரம்ப காலகட்டங்களில் அரேபியர்களுக்கு இருந்த மோகத்தினால் லிப்ஸ்டிக் தயாரிப்பதெற்க்கான மூலப்பொருட்கள் கிடைக்காத சமயத்தில் Rainbow Snake என்ற பாம்பின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகளை கொண்டு தங்கள் உதடுகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளடைவில் இவ்வகை நிரமிகளை பயன்படுத்திய பெண்களை சில கொடிய நோய்கள் தாக்க ஆரம்பித்தன, இதன் காரணமாக பின்விளைவுகளை ஏற்படுத்தாத லிப்ஸ்டிகை அபு அல் காசிம் கண்டறிந்த போதும் கூட லிப்ஸ்டிக்கை உபயோகிப்பதில் மக்களிடையே அச்சம் நிலவியது என்றுதான் கூற வேண்டும்.
பதினாறாம் நூற்றாண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் (Queen Elizabeth - கி.பி.1533 – கி.பி.1603) அவர்கள் தான் லிப்ஸ்டிக்கை முதலில் பயன்படுத்திய மிகப்பெரிய பிரபலம் ஆவார். வெள்ளை நிற உடல் கொண்ட அவர், அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தியது மிகவும் எடுப்பாக காட்சியளித்தது. அப்போது முதல் தான் லிப்ஸ்டிக் பிரபலமடைய துவங்கியது. இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படையாக உபயோகிப்பதில் தொடர்ந்து தயக்கம் இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் பெரும்பாலும் பாலியல் தொழில் செய்பவர்களும், நடிகர்கள்/நடிகைகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
1880-ஆம் ஆண்டு வாக்கில் சாரா பெர்ன்ஹார்ட் (Sarah Bernhardt – கி.பி.1844 – 1923) என்ற புகழ் பெற்ற நடிகை பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த துவங்கினார். அதைத் தொடர்ந்து பொதுமக்களில் சிலரிடையே புகைப்படங்கள் எடுக்கும் போதும் மட்டும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டது.
1884-ஆம் ஆண்டு குர்லைன் (Guerlain) என்ற பிரெஞ்சு நிறுவனம் வணிக நோக்கில் மிகப்பெரிய அளவில் லிப்ஸ்டிக்கை தயாரித்து சந்தைப்படுத்தியது. தேன், ஆமணக்கு எண்ணெய், மான் மற்றும் மாடுகளின் கொழுப்புகளை கொண்டு வணிக நோக்கிலான லிப்ஸ்டிக்கை அந்நிறுவனம் தயாரித்தது. இதற்கு முன்பு ஆங்காங்கே குடிசை தொழில் போலத்தான் தயாரித்து பயன்படுத்தி வந்தார்கள். ஆரம்பத்தில் லிப்ஸ்டிக் பட்டுதுணிகள் மற்றும் பாத்திரங்களில் தான் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது, ஆகையால் லிப்ஸ்டிக்கை தூரிகைகள் கொண்டுதான் உதட்டில் பூசிக்கொள்ள வேண்டும்.
1912-ஆம் ஆண்டு மாரிஸ் லெவி என்பவர் இன்று நாம் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் அடைத்து விற்கப்படும் உருளைகளை உலோகத்தில் தயாரித்து அறிமுகப்படுத்தினார். இதில் சில குறைபாடுகள் இருந்தது, அதனைக் களைந்து 1923-ல் திருகினால் லிப்ஸ்டிக் இருக்கும் தகடு மேலே வரும் வகையிலான உலோக உருளையை ஜேம்ஸ் புரூஸ் பேசன் என்பவர் கண்டறிந்தார். இரண்டாம் உலக போர் நடைபெற்ற காலத்தில் தான் லிப்ஸ்டிக் பிளாஸ்டிக் உருளைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.
1930-ஆம் ஆண்டு எலிசபெத் ஆர்டன் என்ற அலகுகலை நிபுணர் லிப்ஸ்டிக்குக்கு பல்வேறு நிறங்களை தரும் பல்வேறு வகையான நிரமிகளை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார், அதன் பின்னர்தான் பல்வேறு வகையான கலர்களில் லிப்ஸ்டிக் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வர ஆரம்பித்தது.
ஆகவே நண்பர்களே லிப்ஸ்டிக் என்பது மேற்கத்திய கலாச்சாரம் அல்ல, அது நமது கலாச்சாரம் தான். லிப்ஸ்டிக்கை தயாரித்தவர்கள் நாமாக இருந்தாலும் அதனை உலகம் முழுவதும் உள்ள மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் சென்றவர்கள் ஐரோப்பியர்கள் தான். சரி நண்பர்களே நாம் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது, மீண்டும் ஒரு பதிவின் வாயிலாக விரைவில் சந்திப்போம் கூறிக்கொண்டு தற்ப்போது விடைபெறுகிறேன்.
Tweet | |||
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான தகவல்கள்
ReplyDeleteவாருங்கள் நண்பரே., தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கோடி
ReplyDelete