Monday 5 March 2012

உணவுப்பொருட்களை வீணாக்காதீர்கள்; வரலாற்று சுவடுகள்; Don't Waste Food; varalatru suvadugal


எல்லோருக்கும் வணக்கம்., இந்தஉலகில் ஒரு மனிதன் உண்பதற்கு உணவு இல்லாமல் பசியால் இறப்பதைக்காட்டிலும் கொடுமையான விஷயம் என்று வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?. இதில் மேலும் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதனை தவிர வேறு எந்த உயிரினமும் உண்ண உணவில்லாமல் பசியால் இறப்பதில்லையென்பதுதான்.. அப்படியென்றால் குற்றம் யாரிடத்தில் உள்ளது நண்பர்களே மனிதர்களிடத்திலா அல்லது இறைவனிடத்திலா? 

நிச்சயமாக தவறு இறைவனிடத்தில் இல்லை என்பேன் நான். ஏனெனில் இறைவன் எல்லா உயிரினங்களுக்கும் உணவை பொதுவாகத்தான் படைத்தான்.  இப்புவியில் உள்ள அனைத்து விலங்குகளும் பசிக்காக தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் தனது உணவை/இரையை வேட்டையாடுவதோ, வீணடிப்பதோ அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ பயன்படுத்துவதில்லை. விலங்குகள் அனைத்தும் பசியெடுக்கும்போது கிடைத்ததை உண்டு தான் உயிர் வாழ்கின்றன.


ஆனால் மனிதன் மட்டும் இந்தபட்டியலில் இருந்து கொஞ்சம் விலகி பொருளுக்காகவும், பணத்திற்காகவும் உணவு பொருட்களை பதுக்கவும் அல்லது வேறு சில காரணங்களுக்காகவும் பயன்படுத்துகிறான். இவையெல்லாம் ஏன் என்ற கேள்வி அங்கே எழுமானால் அந்த கேள்விக்கு விடையாக கண்களுக்கு தெரியாத தனது சந்ததிகளுக்கு சேர்த்துவைக்க என்ற பதில் தான் விடையாய் கிடைக்கும். இப்படி ஒவ்வொருவரும் தனது சந்ததிகளுக்கு என்று சேர்க்க ஆரம்பித்ததின் விளைவாக உலகில் ஒரு சிலருக்கு மிதமிஞ்சிய உணவு கிடைக்கும் அதேவேளை இன்னொருசாராருக்கு சராசரியாக நாளொன்றுக்கு ஒருவேளை கூட பசிதீரும் அளவிற்கு உண்ண உணவு கிடைக்காமல் போகிறது.


உங்களுக்கு தெரியுமா., உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்களில் நூறுகோடி பேர் தினந்தோறும் இரவு உணவு இல்லாமல் பசியுடனே உறங்குகிறார்கள் என்று? ஆனால் இதே உலகில்தான் ஆண்டுதோறும் இருபத்தைந்து லட்சம் பேர் கட்டுப்பாடற்ற உணவு முறைகளால் உடல் பருமன் ஏற்பட்டு மரணத்தை தழுவிக்கொண்டும் இருக்கிறார்கள். International Food Policy Research Institute (IFPRI) மற்றும் International Federation of Red Cross (IFRC) ஆகிய நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வு அறிக்கைகள் இந்த தகவலை உறுதிப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகள் மேலும் சில அதிர்ச்சியான உண்மைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது. அதுபற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!


தெற்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் அதிக அளவு மக்கள் உணவின்றி பசியால் வாடுவதாக இந்நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் உணவு உற்பத்தி அதளபாதாளத்தை நோக்கி செல்வதாக தெரிவிக்கும் அந்த ஆய்வு அறிக்கைகள் இப்படியே தொடர்ந்து இந்தியாவில் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து கொண்டே சென்றால் இன்னும் இருபதே ஆண்டுகளில் இந்தியா உணவுக்காக வெளிநாட்டிடம் கையேந்தும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரிக்கிறது. இந்தியாவில் ஏனைய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி வேளாண்துறைகளில் ஏற்படாததாலும் மற்றும் விளைநிலங்கள் அதிக அளவில் அழிக்கப்படுவதுதும் தான் இந்தியாவினல் உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதற்க்கு முக்கிய காரணங்களாக அந்த ஆய்வு அறிக்கைகளில் சொல்லப்பட்டிருக்கிறது.


இந்த ஆய்வு கட்டுரைகளில் மற்றுமொறு சுவாரஸ்யமான விசயமும் கூறப்பட்டிருக்கிறது என்னவெனில் உணவுப்பொருட்களை அதிக அளவில் வீணடிப்பதிலும் இந்தியர்கள் தான் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என்கிறீர்களா? இந்தியாவில் திருமணங்கள் வைபவங்கள் எப்போதும் வெகு விமர்சியாக நடத்தப்படும் என்பது நாமெல்லாம் அறிந்ததே சராசரியாக இந்தியாவில் பெரும்பாலான கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் உணவுகளில் பாதிக்கு மேல் குப்பைத்தொட்டிக்குத்தான் போகிறதாம். (இதனை நாம் நிறைய திருமண வீடுகளில் பார்த்திருப்போம்) அதுபோல இந்தியாவில் உணவு உண்பதற்காக அதிக அளவு மக்கள் ஹோட்டல்களை பயன்படுத்துகிறார்கள், அங்கு பரிமாறப்படும் உணவுகளையும் பெரும்பாலானோர் முழுமையாக சாப்பிடுவதில்லை, ஹோட்டல்களில் பரிமாறப்படும் உணவுகளில் பகுதிக்கு மேல் வீணாக குப்பைதொட்டியைத்தான் சென்றடைவதாக அந்த ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


பக்கத்து நாட்டுக்காரர்களல்ல நம் நாட்டை சேர்ந்த நம் சகோதரமக்களே ஒரு வேலை கூட உண்ண உணவின்றி பசியால் வாடிக் கொண்டிருக்கும்போது இன்னொருபுறம் நம்மக்களே இப்படி உணவுப் பொருட்களை வீணடிப்பதை பார்த்துக்கொண்டிருக்கலாமா? இது நிச்சயம் தடுக்கப்பட வேண்டுமல்லவா? கல்யாண வீடுகளில் உணவுப் பொருட்கள் பெரும்பாலும் வீணாவதை தடுக்கமுடியாது, ஆனால் ஹோட்டல்களில் உணவு வீணடிக்கப்படுவதை நம்மால் தடுக்க முடியும். எப்படி என்கிறீர்களா.  உங்களுக்கு ஒரு நிஜத்தை கதையாக சொல்கிறேன் வாருங்கள்..!

உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காக சென்றார். ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்துவிட்டன. நம் இந்தியர் பில் கேட்டார்.


சிறிது நேரத்தில் பறிமாரியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார். பில்லை பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி  காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. கடுப்பான நம் இந்தியர் கத்த ஆரம்பித்தார், இது என்ன அநியாயம், அக்கிரமம்? யார் உங்களது மேனேஜர் வரச்சொல் அவரை..! நான் புதியவன் என்பதால் எல்லோரும் என்னை ஏமாற்ற பார்க்கிறீர்களா, பில் தொகை இரண்டு மடங்காக இருக்கிறதே.., நான் போலீசைக் கூப்பிடுவேன் என்றார்.

மேனேஜர் வந்து அனைத்தையும் விசாரித்துவிட்டு மெல்ல சிரித்துக்கொண்டே கூறினார். தாராளமாய் கூப்பிடுங்கள். அவர்கள் வந்தால் மோசமாகப்போவது உங்கள் நிலைமை தான். உண்மையில் நீங்கள் சாப்பிட்டதற்க்கான பில்தொகை ஐநூறு மார்க்தான் மறுப்பதற்கில்லை, ஆனால் நீங்கள் சாப்பிடாமல் வீணடித்த உணவிற்காக அபராத தொகை ஐநூறு மார்க். பணம் உங்களுடையதுதான் அதில் சந்தேகமில்லை ஆனால் உங்களால் வீணடிக்கப்பட்ட இந்த உணவு பொருட்கள் உங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை, அது இந்த சமுதாயத்தின் சொத்தும் கூட. நீங்கள் இப்படி வீணாக்காமல் இருந்திருந்தால் அது இன்னொருவரை சென்றுடைந்து அவருடைய பசியை தீர்த்திருக்கும். போதிய உணவு கிடைக்காமல் பசியால் வாடுவோர் உலகம் முழுவதும் இருக்க.., உங்களால் எவ்வளவு சாப்பிடமுடியுமோ அதற்குத்தான் நீங்கள் ஆர்டர் கொடுத்திருக்க வேண்டும் இப்படி உணவுப்பொருட்களை வீணடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எங்களது ஹோட்டலின் மெனுகார்டுக்கு கீழே எங்கள் ரெஸ்ட்டாரெண்ட்டின் விதிமுறைகளை எழுதியிருக்கிறோம். நீங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். இங்கு மட்டுமல்ல ஜெர்மனியின் பெரும்பாலான ஹோட்டல்களில் இதே விதிமுறைகள் தான் வழக்கத்தில் உள்ளது என்றார்.

இது சமீபத்தில் எனது நண்பன் எனக்கு சொன்ன உண்மை கதை, இதில் இருக்கும் உண்மையை நம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் இணையங்களின் வாயிலாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உணவுபொருட்கள் கிடைக்காமல் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்று புகைப்படங்கள் வாயிலாகவும் கட்டுரைகள் வாயிலாகவும் பார்க்கிறோம். ஆகையால் பொது இடங்கள்விழாக்கள் மற்றும் ஹோட்டல்களில் மட்டுமல்ல வீடுகளிலும் கூட உணவுப்பொருட்களை வீணடிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் இல்லையா நண்பர்களே...? முதலில் அதனை நம்மிடம் இருந்து துவக்குவோம். இனி ஒருநாளும் எந்த இடத்திலும் உணவுப்பொருளை வீணடிப்பதில்லை என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். நாம் ஒவ்வொருவரின் மொத்தம் தான் இந்த நாடு. ஆகையால் இன்று நாம் திருந்தினால் நாடும் ஒருநாள் திருந்தும்.

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை தவறாமல் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே.., அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும். மீண்டும் சந்திப்போம், வணக்கம்..!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

14 comments:

  1. அனைவரும் படிக்க வேண்டிய பதிவு .. உணவின் அருமை இல்லாத போதுதான் தெரியும்

    ReplyDelete
  2. நல்ல பதிவு...உணவின் அருமை அது கிடைக்காதவனுக்கு தான் தெரியும்...கல்யாண மண்டபத்தில் பந்தியில் நாசூக்காய் சாப்பிட்டுவிட்டு உணவுகளை வீணாக்கும் நபர்களை பார்த்தால் எனக்கு வெறுப்பு ரொம்ப வரும்

    ReplyDelete
    Replies
    1. விபரம் தெரியாத வயதுகளில் நானும் கல்யாண மண்டபங்களில் பந்தியில் சாப்பிட அமரும் போது உணவுப்பொருட்களை வீணடித்தவன்தான். ஒரு நாள் ..., ஒரு பந்தியில் என் தந்தையுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும்போது இலையில் கொஞ்சம் உணவை சாப்பிடமுடியாமல் மீதி வைத்துவிட்டு எழுந்துவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் தந்தை என்னை செம்ம காட்டு காட்டினார். அன்றிலிருந்து இன்றுவரை எங்கு சாப்பிட அமர்ந்தாலும் தட்டில் மீதி வைப்பதில்லை.

      தங்களின் வருகைக்கு நன்றி கோவை நேரம்...!

      Delete
    2. அன்பரே வாழ்த்துக்கள் , நல்ல முயற்சி.

      Delete
  3. உணவின்றி ஒரு மனிதன் மரணப்படுகிறான் என்றால் இந்த அசிங்கம் அனைத்து மனித சமூகத்தையும் சாரும்..

    பகிர்ந்து உண்டு உயிர் வாழ்வோம்..
    அதிகாம இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்போம்...

    நம்மால் வீணடிக்கப்படும் உணவு அடுத்தவருக்கு உயிரளிக்கும் ஒரு மருந்து என்பதை உணல்வோம்...

    நல்ல கருத்தை மையப்படுத்தி தாங்கள் பதிவிட்ட இப்பதிவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...


    மனிதம் வளர்ப்போம்....

    ReplyDelete
    Replies
    1. தங்களை போன்றவர்கள் இவ்வளவு நேரம் செலவழித்து கருத்துரை இடுவது என்னை போன்ற மழலைகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்ல ...!

      Delete
  4. உண்மை..உண்மைக்கதை...சுடுகிறது...நல்லதோர் ஆக்கம் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அன்பரே .., தங்களது வருகை எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது...!

      Delete
  5. நல்ல பதிவு. வீணாக்கும் உணவுக்கு அபராதம் நல்ல யோசனை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ.., வருகைக்கும் கருத்துக்கும்.!

      Delete
  6. திருமணங்களிலும், விசேஷங்களிலும், வீணடிக்கப்படும் உணவு அபரிதமானது. இதைப் பார்க்கும் போது மனது, கொதிக்கிறது. இதை தடுக்க, இந்தப் பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அளித்த தங்களுக்கு வாழ்த்துக்கள் பல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...