Monday, 30 April 2012

விண்வெளி ஆய்வின் ரகசியங்கள், எதிர்காலத்தில் பெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்; Secret of Space Exploration


அனைவருக்கும் வணக்கம், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, வெட்டியாய் கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழித்து நிலவுக்கு மனிதனை அனுப்புகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு ஆராய்ச்சிகள் செய்வதும், ராக்கெட் விடுவதும் தேவைதானா? ஒரு பயனும் இல்லாத இப்படிப்பட்ட திட்டங்களுக்கு மக்கள் வரிப்பணத்தை செலவழித்து வீணடிப்பதைக்காட்டிலும் பசிக்கு உணவில்லாமல் பட்டினியால் இறந்து கொண்டிருக்கும் எத்தனையோ மக்களின் வயிற்றுப் பசியை போக்குவதில் முதலில் செலவிடலாமே? இப்படிப்பட்ட கேள்வி ஒவ்வொரு முறை இஸ்ரோ வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போதெல்லாம் ஒருசாரர் மக்களால் எழுப்பப்படுகிறது. 

வெற்றிகரமாக விண்வெளிக்கு ராக்கெட் ஏவும்போதே இத்தகைய கேள்விகள் எழுகிறது என்றால் அந்த முயற்சி தோற்கும் போது எத்தனை கேள்விக்கணைகள் எழும் என்று நினைத்துப்பாருங்கள்..? ஒரு பயனுமே இல்லாவிட்டால் ஆறு முறை அமெரிக்கா ஏன் நிலவுக்கு மனிதனை (Manned Moon Landing) அனுப்பியது? அமெரிக்கா தொடர்ந்து செவ்வாய்க்கும் (Mars) ஏனைய பிற கிரகங்களுக்கும் அடிக்கடி ஏன் விண்கலங்களை (Space Shuttle) அனுப்பிக்கொண்டிருக்கிறது? ரஷ்யா ஏன் அனுப்புகிறது? சீனா ஏன் வரிந்துகட்டிக்கொண்டு நிலவுக்கு மனிதனை அனுப்புவதில் இத்தனை தீவிரமாய் உள்ளது? என்பதைப் பற்றியெல்லாம் விஞ்ஞானத்தை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அவர்கள் நினைத்துப்பார்ப்பதேயில்லை..!


உலகில் காரணம் இல்லாமல் எந்த செயலுமே இல்லை. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் உலக நாடுகளுக்கிடையே போட்டாபோட்டி நிலவுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. இந்த புவியில் கிடைக்கும் எல்லா பொருட்களுக்குமே என்றாவது ஒரு நாள் தட்டுப்பாடு ஏற்படும். அப்படி பற்றாக்குறை ஏற்படும் பொருள் என்று தற்போது முதலிடத்தில் உள்ள மிக இன்றியமையா பொருள் கச்சா எண்ணெய் (Crude Oil). அடுத்த சில வருஷங்களில் நிச்சயம் பூமிக்கு கீழே உள்ள கச்சா எண்ணெய் வளம் முற்றிலும் தீர்ந்து போய்விடும். ஒரு பேச்சுக்கு நாளையே உலகம் முழுவதும் கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுபோகிறது என்று வைத்துக்கொள்வோம் என்ன ஆகும் நினைத்து பாருங்கள், உலகம் முழுவதிலும் உள்ள போக்குவரத்து முடங்கி ஒரே மாதத்தில் நாம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடமாட்டோம்? அதே நிலை தொடர்ந்து ஆறும் மாதங்கள் வரை நீடிக்குமானால் என்னவாகும்? அப்போது கச்சா எண்ணெய்க்கு மாற்றாக ஒரு எரிபொருள் இருந்தால் தானே இந்த உலகமே இயங்கும். தற்போது வரை அறியப்பட்ட அளவில் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக இருக்கும் ஒரே எரிபொருள் அல்லது வருங்கால தலைமுறை மக்களுக்கு பெட்ரோலுக்கு பதிலாக இருக்கப்போகும் எரிபொருள் எது தெரியுமா? ஹீலியம்-3 (Helium -3) என்ற வாயுதான்.! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த ஹீலியம்-3 புவியில் மிக மிக அரிதாகத்தான் கிடைக்கிறது, ஆனால் நிலவின் மேற்பரப்பில் சில குறிப்பிட்ட இடங்களில் ஹீலியம்-வாயுக்கள் அதிகம் இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் நம்பப்படுகிறது.ஒருவேளை நிலவில் ஹீலியம்-3 வாயுக்கள் பெருமளவில் இருப்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டால் அதை அங்கிருந்து பூமிக்கு கொண்டுவந்து பெட்ரோல், டீஸலுக்கு பதிலாக மாற்று எரிபொருளாக புவியில் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும். இந்த மாற்று எரிபொருளினால் பூமியில் உள்ள காற்று மாசுபடுவது பெருமளவில் குறையும். மேலும் சந்திரனில் அதிக அளவில் ஹீலியம்-3 வாயுக்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுவிட்டால் எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வுக்காக (Space Research) பிற கிரகங்களுக்கு (Planet) நாம் அனுப்பும் விண்கலங்கள் வழியில் நிலவில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு தங்கள் பயணத்தை தொடர முடியும். கிட்டத்தட்ட புவியில் வாகனங்களுக்கு ‘பெட்ரோல் பங்க் இருப்பதைப்போல் விண்கலங்களுக்கு ‘நிலவு எரிபொருள் நிரப்பும் நிலையமாக செயல்பட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக பால்வழிமண்டலத்தில் (Milky way) சூரியனுக்கு அப்பாலும் பல சூரியமண்டலங்கள் (Solar System) உள்ளன, இப்போது இருட்டுக்குள் இருக்கும் அந்த பால்வழிமண்டலங்கள் அப்போது வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

பொதுவாக எரிபொருள் தேவைக்காக மட்டும் வேற்றுகிரக ஆய்வுகள் நடப்பதில்லை, புவியில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் கனிமவளங்களின் பயன்பாடுகள், என்றாவது ஒருநாள் அந்த கனிமவளங்களுக்கு புவியில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும், அவ்வாறு தட்டுப்பாடு ஏற்படும்போது அவை எந்த கிரகத்தில் கிடைக்கிறதோ அங்கிருந்து அவற்றை எடுத்துவந்து புவியில் பயன்படுத்தும் நோக்கில் தான் விண்ணில் உள்ள பல கிரகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. விண்வெளியை பொறுத்தமட்டில் யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. புவியில் எல்லைக்கோடுகள் உள்ளதைப் போல விண்வெளியில் ஏற்படுத்திட முடியாது, இது அமெரிக்காவின் பகுதி இது ரஷ்யாவின் பகுதி என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது. திறமையும் தொழில்நுட்பமும் உள்ள யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று எதையும் எடுத்துக்கொண்டு வரமுடியும். இப்போது புரிகிறதா எல்லா நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு ஏன் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதில் முனைப்பு காட்டுகின்றன என்று. சரி, இப்போது உங்களிடையே ஒரு கேள்வி எழுந்திருக்கும் என்னவென்றால் நிலவில் ஹீலியம்-3 வாயுக்கள் இருக்கிறதா இல்லையா என்று? வாருங்களேன் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.!


தொழில்நுட்ப மாமேதைகளை கொண்ட நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் இதுவரையில் நிலவின் மத்திய ரேகைப்பகுதியில் இறங்கித்தான் ஆய்வுகள் மேற்கொண்டது. ஏனெனில் அனுப்பப்படும் விண்கலங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் திரும்பி வருவதற்கு ஏற்ற அனைத்து சூழல்களும் உள்ள பாதுகாப்பான இடம் நிலவின் மத்தியரேகைப்பகுதிதான். ஆனால் இந்தியா தனது ஆய்வுக்கு இப்பகுதியை தேர்ந்தெடுக்காமல் உலக நாடுகளின் தொழில்நுட்பவாதிகளுக்கு சவாலாக இருக்கும் நிலவின் துருவ பகுதியில் தனது சந்திராயன் விண்கலத்தின் வழியாக ‘மூன் இம்பாக்ட் ப்ரோப் என்ற கருவியை இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவின் இந்த முதல் முயற்ச்சியிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் மற்றும் நிலவில் ஹீலியம்-3 வாயுக்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய சில அதிமுக்கியமான தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பி சோதித்து, பின் நிலவுக்கும் மனிதனை அனுப்பும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பம் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்தால் கூட இன்றளவும் அமெரிக்கா மட்டும் தான் நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நம்மிடம் உள்ள ஜி.எஸ்.எல்.வி (G.S.L.V) ராக்கெட் மூலமாகவே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்றாலும், பொதுவாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் பல்வேறு தொழில்நுட்ப சவால்கள் உள்ளன. நம்முடைய விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்கலங்களின் செயல்பாட்டின் நம்பகத்தன்மையை 100% சதவீதம் பாதுகாப்பானது என்று உறுதி செய்தால் மட்டுமே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும்.


விண்வெளி பயணம் என்று எடுத்துகொண்டால் புவியின் வளிமண்டலத்தை தாண்டியதுமே முதல் சவால் ஆரம்பமாகிவிடுகிறது. முதலில் வாயுக்களற்ற வெற்றிடத்தில் நாம் பயணிக்க வேண்டும். வெப்பநிலை குறைவாகவும் வெளிப்புற அழுத்தம் அதிகமாகவும் இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் பயணிக்கும் போது விண்கலங்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்ய புவியிலேயே வெற்றிடத்தை உருவாக்கி விண்கலங்களை சோதனை செய்திருக்க வேண்டும், இத்தகைய சோதனைகளில் ஈடுபடாததினால் தான் சமீபத்தில் இந்தியாவின் முதல் ‘கிரையோஜெனிக் எஞ்சின் ராக்கெட் தோல்வியில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் தாண்டி விண்வெளியில் உள்ள வேறு கிரகத்திற்கு அருகில் சென்று விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம், அந்த கிரகத்திற்கு இருக்கும் ஈர்ப்புவிசை நம் முன் நிற்கும் அடுத்த சவால். இந்த சவாலை வெல்ல அந்த கிரகத்தின் ஈர்ப்புவிசையை துல்லியமாக கணித்து அதற்க்கு ஏற்றாற்போல் நம்முடைய விண்கலத்தின் வேகத்தை மாற்ற வேண்டும், இதில் அனு அளவு தவறு நேர்ந்தாலும் கூட விண்கலம் அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு அதன் மீது மோதி வெடித்து அழிந்துவிடும், அந்த கிரகத்தின் ஈர்ப்புசக்திக்குள் நுழைந்து விட்டாலும் கூட அந்த கிரகத்தின் மேற்பகுதியில் இறங்குவது இன்னொரு சவால், அதனை முறியடிக்க மேலும் பல துல்லியமான கணக்கீடுகளை வகுத்துதான் அதன் மேற்பரப்பில் தரை இறங்க முடியும்.


ஆளில்லாத விண்கலங்களை அனுப்புவதிலேயே இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போது அந்த விண்கலத்தில் ஒருவேளை நாம் மனிதர்களை அனுப்பினால் மேற்சொன்ன சிக்கல்களை சமாளிப்பதோடு அனுப்பப்படும் விண்வெளிவீரரின் (Astronaut) உயிரையும் பாதுகாக்க வேண்டிய கூடுதல் சுமை ஏற்படும். விண்கலத்திற்குள் இருக்கும்வரை விண்வெளி வீரருக்கு பல்வேறுகட்ட பாதுகாப்புகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும், என்றாலும் கூட விண்கலத்தை விட்டு வெளியே வரவேண்டிய நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பாக விண்வெளி உடை (Space Suit) அணிவிக்கப்படுகிறது. விண்வெளி உடையில்லாமல் விண்வெளியில் ஒருவர் உயிருடன் மிதப்பது என்பது சாத்தியமற்றது. முதல் காரணம் விண்வெளியில் வெளிப்புறத்தில் நிலவும் அதிகப்படியான அழுத்தம். இந்த அழுத்தம் உடலுக்குள் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் உடலிலுள்ள துளை வாயிலாகவோ அல்லது உடலை கிழித்துக்கொண்டோ பியித்து வெளியே எறிந்துவிடும். உதாரணதிற்கு விமானத்தில் வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரெண்டு கதவு திறந்துகொண்டால் உள்ளே இருப்பவர்களையெல்லாம் அள்ளி வெளியே எறிகிரதல்லவா அதுபோலத்தான்.


மேலும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்களை பூமிக்கு வராவிடாமல் தடுத்து மனிதர்களை ஆபத்திலிருந்து காக்க பூமிக்கு பாதுகாப்பாய் ஓசோன் மண்டலம் உள்ளது. விண்வெளியில் மனிதர்கள் ஓசோன் மண்டலத்தை தாண்டிச் செல்லும் போது கதிர்வீச்சு அபாயங்களிளிருந்து பாதுகாப்பது இன்றியமையாததாகிறது, அடுத்ததாக மிகமுக்கியமாக விண்வெளியில் நாம் சுவாசிக்க தேவையான பிராணவாயுவான ஆக்ஸிஜன் இருக்காது, இப்படிப்பட்ட அனைத்து சவால்களையும் சமாளிக்கும் பொருட்டு வீரர்களுக்கு விண்வெளி உடை அணிவிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 130 கிலோ எடை கொண்ட விண்வெளி வீரர்கள் அணியும் விண்வெளி உடை (Space Suit) பணிரெண்டு அடுக்குகளை கொண்டது. இதில் கதிர் வீச்சுக்களின் தாக்கத்திலிருந்து விண்வெளி வீரர்களை காக்க மட்டும் ஏழு அடுக்குகள் அமைக்கப்படுகின்றன. விண்வெளி உடை வீரர்களை கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதோடு அவர்களுடைய உடலை குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது. ஈர்ப்புவிசை இல்லாத இடங்களில் நடக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அதை சமாளிக்கும் வகையிலும் அந்த உடை வடிவமைக்கப்பட்டிருக்கும், இந்த ஆடையின் மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 50 கோடி ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா நண்பர்களே.

இத்தனை ஆபத்துகளையும் தாண்டி வெறும் உப்புச்சப்பில்லாத விசயத்திற்க்காக விண்வெளியில் ஆய்வு செய்துகொண்டிருக்க விஞ்ஞானிகள் ஒன்றும் நம்மளை போல் சாதாரணர்களோ அல்லது முட்டாள்களோ அல்ல. என்றாவது ஒருநாள் புவியில் ஏற்படும் கனிமவளங்களின் தட்டுப்பாட்டை போக்க வேற்றுகிரகங்களிளிருந்து அவற்றை எடுத்துவந்து பற்றாக்குறையை ஈடுகட்டி மனிதனது வாழ்வாதாரம் அழிவுப்பாதையை நோக்கி பயணித்துவிடாமல் தடுப்பதற்கே உயிரைப்பணயம் வைத்து விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே, உங்கள் கருத்துக்கள் மூலமாகத்தான் என் தவறுகளை திருத்திக்கொள்ளவும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் இயலும். விரைவில் மீண்டும் ஒரு பயனுள்ள தகவலின் வாயிலாக உங்களை சந்திக்கிறேன், நன்றி.., வணக்கம்.!

பதிவுகளை தவறவிடாமல் வாசிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை கீழே உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

44 comments:

 1. அருமை நண்பா பல செய்திகள் தங்களால் தெரிந்து கொண்டேன் இது போன்று பல செய்திகள் தாருங்கள் நண்பா மிக்க நன்றிஃஃஃ

  ReplyDelete
 2. arumayaana padhivu nandru
  surendranath1973@gmail.com

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நண்பரே, தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன்., கருத்துக்கு மிக்க நன்றி ..!

   Delete
 3. really very nice.
  -by Ubaid

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

   Delete
 4. பல புதிய தகவல்கள் .. உங்கள் பதிவு அனைவரும் படித்து பாதுகாக வேண்டிய பொக்கிஷம் .. தொடரட்டும் உங்கள் பணி

  ReplyDelete
 5. நிலவு யாருக்கு சொந்தம் என்று உலக நாடுகளிடையே சண்டை வராமலிருக்கவேண்டும்.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க தலைவரே..., தங்களது வருகையால் உளம் மகிழ்கிறேன்., கருத்துக்கு மிக்க நன்றி .!

   Delete
 6. நல்ல தகவல்கள்..................வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

   Delete
 7. அட அப்படியா....எனக்கு....,புதுசு கண்ணா புதுசு தகவலை சொன்னேன்.

  எப்பூடீயோ நல்லது நடந்தால் சர்தான்

  நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 8. தங்களை எப்படி பாரட்டுவது என்றே தெரியவில்லை!என்னைப் போன்ற விஞ்ஞான அறிவு குறைந்தவர்களும் எளிதாக அறிய மிகவும் தெளிவாக இக் கட்டுரை எழுதியுள்ளீர் நன்றி!நன்றி நன்றி! சா இராமாநுசம்

  ReplyDelete
 9. வழக்கம்போல் அறிவுக்கு விருந்து...
  இப்படியே தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே...

  ReplyDelete
 10. Replies
  1. வாங்க 'நண்டு@நொரண்டு' ராஜசேகர் சார் ., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன், கருத்துக்கு மிக்க நன்றி சார்...!

   Delete
 11. உண்மையில் அனைத்தும் அறியாத தகவல்
  தெளிவாக விரிவாக பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 12. தகவல்கள் அருமை...விஞ்சான விஷயத்துடன் அதை சாமான்ய மக்களுக்கு எளிதில் விளக்கிய விதமும் அருமை மாப்ளே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தலைவரே.., தங்களது வருகையால் உற்சாகமடைகிறேன், கருத்துக்கு மிக்க நன்றி ..!

   Delete
 13. புதிய விஷயங்கள்..... புதிய கோணங்கள் அலசிய விதம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

   Delete
 14. புதுமையான தகவல்கள்.வியப்பாகவும் இருக்கிறது.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹேமா அக்கா, தங்களது வருகையால் உற்சாகமடைகிறேன், கருத்துக்கு மிக்க நன்றி ..!

   Delete
 15. அருமையான ஆய்வு கட்டுரை! தகவலுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தலைவரே.., தங்களது வருகையால் அகம் மகிழ்கிறேன், கருத்துக்கு மிக்க நன்றி ..!

   Delete
 16. பல புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.நன்று.
  நன்றி

  ReplyDelete
 17. அருமையான அறிவியல் தகவல்கள் அடங்கிய பதிவு.நன்று.

  ReplyDelete
 18. ///வரலாற்று சுவடுகள்May 5, 2012 11:00 PM

  /////////////சென்னைமேயர் சைதை துரைசாமி அவர்கள் நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளை மூலம் படித்த 34 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள்///////////

  நான் இதுவரை கேள்விப்படாத விஷயம்.., உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் இது ..!///

  இதை இதுவரை கேள்விப்படவில்லையா? இதில் உனக்கு விண்வெளி ஆய்வு தேவையா? தமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா? தமிழில் செய்திகள் ஏதாவது படிப்பதுண்டா? சொந்த நாட்டில் என்ன நடக்கின்றது என்று அறிந்துகொண்டு விண்வெளிக்கு செல்லலாமே?

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணே .., ஜாக்கிசேகர் அண்ணன் தலத்தில அவர் இன்று இட்ட (06-05-2012) பதிவுக்கு நான் இட்ட கருத்துரையை இங்கே மேலே கோடிட்டு காட்டியுள்ளீர்கள்..,

   உலகத்தில் நடக்கிற எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு நான் ஒன்னும் அவ்வளவு பெரிய அறிவாளியில்லை அண்ணே. உலகத்தில எனக்கு தெரியாத விஷயங்கள் கோடி உண்டு, அதில் இதுவும் ஒன்று ..!

   ஒரு விஷயத்தை படிக்கும் போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறுமொழியாக எழுதிவிடுகிறேன். அது தவறு என்றால் என்னை திருத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகிறது. வருகைக்கும் அறிவுரைக்கும் நன்றி அண்ணே.!

   Delete
 19. நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். உண்மையிலேயே பாராட்டும்படியான விசயம். தமிழில் இது போன்ற அறிவியல் செய்திகள் தரும் தளங்கள் குறைவுதான்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விச்சு சார், தங்களது வருகை என்னை உற்சாகமடையச் செய்கிறது, கருத்துக்கு மிக்க நன்றி ..!

   Delete
 20. பிற்போக்கு வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் இம்மாதிரியான ஆய்வுக்கட்டுரைகளை படிப்பதே இல்லை தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. பெட்ரோல் வளம் குறைந்து வருகிறது இது போன்ற ஆய்வுகள் அவசியம். மாற்று எரிசக்தி குறித்த ஆய்வுகளும் நடைபெருகிறது. பிற்போக்கு வாதிகள் கவலை சாப்பாடு மட்டும்தான் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 21. பெட்ரோலுக்கு ஒரு மாற்று எரிப்பொருளா?! அப்படியிருந்தால் மகிழ்ச்சியே. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 22. உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்

  எனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
  www.suncnn.blogspot.com

  ReplyDelete
 23. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

   Delete
 24. நிதானமாக வரி விடாமல் படிக்கும்படியான அருமையான தகவல்களோடு வழக்கம் போல் அழகாக வந்துள்ள ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!

  பேசும் அடிப்படை அறிவில்லாத சில மூடர்களின் புலம்பல்களை புறம் தள்ளி தங்கள் பணி தொடரட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே ..!

   Delete
 25. விண்வெளியில் உள்ளது அழுத்தமா வெற்றிடமா என்பது எனக்கு சந்தேகமே

  ReplyDelete
  Replies
  1. வாயுக்கள்..தூசுக்கள்..வெற்றிடம்...ஆகியவை அனைத்தும் உள்ளடக்கியதுதான் விண்வெளி!

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!

   Delete
 26. நல்ல பணி தொடரட்டும் நன்றி

  ReplyDelete
 27. நல்ல பணி தொடரட்டும் நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...